சவப்பெட்டிக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா! சுங்கவரித்துறையினர் மீட்டனர்..!!

889

நான்கு சவப்பெட்டிகளுக்குள் கஞ்சா மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுங்கவரித்துறையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

Doubs நகரை ஊடறுத்துச் செல்லும் A36 நெடுஞ்சாலையில் Miserey-Salines நகர் அருகே வைத்து இதனை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன்படி, ஸ்பெயினில் இருந்து வாகனம் ஒன்றில் நான்கு சவப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ருமேனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளது. சவப்பெட்டிகளுக்குள் உடலங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட பிரெஞ்சு சுங்கவரித்துறையினர் சந்தேகத்தின் பேரின் சவப்பெட்டிகளை உடைத்து சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, 60 கிலோ எடைகொண்ட கஞ்சாப்பொதிகள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ருமேனிய நாட்டு குடியுரிமை கொண்ட வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் மீது ஸ்பெயினில் வழிப்பறி கொள்ளை உட்பட எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்தது.


விசாரணைகளில், குறித்த கஞ்சா பொதிகள் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை என தெரியவந்துள்ளது.