சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் நேர்ந்த சம்பவம் : சகோதரர் உட்பட 3 பேர் கைது!!

366

திருப்பத்தூர்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு ( 21 ) பட்டியலின இளைஞர். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த நர்மதா ( 20 ) என்பவரை காதலித்து வந்தார்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த டிச. 6- ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, டிச. 7-ம் தேதி தியாகு, மற்றும் நர்மதாவை அம்பலூர் காவல் துறையினர் வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில், பெண்ணின் விருப்பப்படி நர்மதாவை அவரது கணவர் தியாகுவுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தியாகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தனது மனைவியுடன் தருமபுரி மாவட்டத்தில் தங்கினார். தியாகுவுக்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.


இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிக்கு மனைவி நர்மதாவுடன் வந்தார். தியாகு சொந்த ஊருக்கு வந்திருப்பதை அறிந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர்கள் நேற்று தியாகுவின் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று அங்கு தியாகு மற்றும் அவரின் பெற்றோரை தாக்கிவிட்டு. நர்மதாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கூறப் படுகிறது.

இது குறித்து அம்பலூர் காவல் நிலையத்தில் தியாகு புகார் மனு ஒன்றை நேற்று அளித்தார். அதில், தனது மனைவி நர்மதா-வை, அவரது தந்தை ராஜேந்திரன், சகோதரர்கள் கோவிந்த ராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை ஆகியோர் கடத்தி சென்றதாகவும்,

தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன் பேரில் நர்மதாவை கடத்தி சென்ற அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட 5 பேர் மீது அம்பலூர் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, நர்மதாவின் சகோதரர்கள் ராஜேஷ் உட்பட 3 பேரை அம்பலூர் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும், தலை மறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.