சீனப் பொருட்களை புறக்கணிக்க இந்திய பிரபலங்களுக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

899

சீன பொருட்களை புறக்கணிக்கும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவுக்கு இந்திய பிரபலங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு
கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா – சீனா இடையே கடந்த சில நாட்களாக எல்லைப் பிரச்சனை இருந்து
வருகிறது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கும்
இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இந்தியா அமைதியை விரும்புவதாகவும், ஆனால் இந்தியாவை சீண்டினால் தக்க
பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். இந்த மோதல் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்க அகில
இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. லடாக் எல்லையில்
நடந்த மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளது வருத்ததை ஏற்படுத்தியுள்ளதாக
குறிப்பிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனப் பொருட்களை
புறக்கணித்துவிட்டு, இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த
அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் சீன பொருட்களை புறக்கணிப்பதில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்புடன் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதே போல் சீன பொருட்களுக்கு ஆதரவு அளித்து விளம்பரம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சீன ஸ்மார்ட் போன்களுக்கு ஆதரவு அளித்து விளம்பரம் செய்யும் அமீர் கான், விராட் கோலி, கத்ரினா கைஃப், ரன்வீர் சிங், சல்மான்கான், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பிரபலங்களை குறிப்பிட்டு தங்கள் கோரிக்கையை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.

நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில் இதனை நாம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியப் பிரபலங்களிடம் இருந்து விரைவில் நல்ல பதில் வரும் என எதிர்பார்ப்பதாகவும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.