ஆஸ்திரேலியா…
தோழியுடன் சுற்றுலா செல்ல விரும்பிய நபர் செய்த தவறு அவர்களது வாழ்நாள் முழுவதும் ஞாபகத்தில் இருக்கக்கூடிய தருணமாக அமைந்துவிட்டது. பொதுவாக, சுற்றுலா செல்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இரைச்சல்களும், அழுத்தும் அலுவலக பணியும் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு ஒரு குட்டி டாட்டா சொல்லிவிட்டு ஒரு பயணம் போக வேண்டும் என விரும்பாத நபர்களே இருக்க முடியாது. பயணம் மேற்கொண்டு புதிய இடங்களை தேடிச் செல்லும் அனுபவத்தை பெற அனைவருமே நினைப்பது உண்டு.
ஆனால், பொருளாதார சூழ்நிலை, விடுப்பு என ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் திடீரென முளைத்துவிடும். ஆனாலும், எல்லாவற்றையும் சமாளித்து நினைத்ததை சாதிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சுற்றுலா செல்வது சரிதான் என்றாலும் அதற்கான திட்டங்களை முன்கூட்டியே கவனமாக வகுக்க வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள காலநிலை, தங்கும் வசதிகள், சட்ட திட்டங்கள் என பல விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.
சில சமயங்களில் முக்கியமான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து முடித்தாலும் சிறிய தவறால் மொத்த பிளானும் சொதப்பிவிடும். அப்படியான சம்பவம் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நண்பர்களுக்கு நடந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பென் கென்னடி. இவருடைய தோழி சோஃபி ஆலிஸ். இருவரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.
அப்படி இதுகுறித்து அவர்கள் யோசித்துவந்த நிலையில் ஹங்கேரியில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான புதாபெஸ்ட்-க்கு செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். இதற்கான ஆயத்தங்களில் இருவரும் இறங்க டிக்கெட் எடுக்கும் போது சொதப்பி விட்டார்கள்.
அதாவது புதாபெஸ்ட்-க்கு விமான டிக்கெட் எடுக்க நினைத்த கென்னடி தவறுதலாக ரோமானியாவில் உள்ள புக்காரெஸ்ட்-க்கு டிக்கெட் எடுத்துவிட்டார். இதில் அல்டிமேட் என்னவென்றால் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும்போது தான் இவர்களுக்கு இந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.
இருப்பினும் புதிய நாட்டிற்கு சென்றதால் மகிழ்ச்சியாகவே இருந்ததாக தெரிவித்திருக்கிறார் சோஃபி. அங்குள்ள பழமையான தேவாலயங்கள், இசை கச்சேரிகளுக்கு சென்றதாகவும், வாழ்வில் மறக்க முடியாத திடீர் திருப்பங்கள் நிறைந்த பயணமாக இது அமைந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்த அவரது பதிவில் ஊருக்கு திரும்பும்போது ஆஸ்திரேலியாவிற்கு பதிலாக ஆஸ்திரியாவிற்கு சென்றுவிடாதீர்கள் என நெட்டிசன்கள் அட்வைஸும் கொடுத்து வருகின்றனர்.