தெருநாய் ஒன்று கடித்ததில், உடனே மருத்துவமனைக்கு சென்று முறையாக தடுப்பூசிகள் அனைத்தையும் போட்ட நிலையிலும் 21 வயதேயான சிருஷ்டி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் சிருஷ்டி (21). இவர் பவுசிங்ஜி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, செல்போனில் வந்த அழைப்புக்கு பதிலளிக்க சாலையில் நின்றிருந்த போது, தெருநாய் ஒன்று அவரது காலில் கடித்துள்ளது.
நாய் கடித்த பின்பு, உ டனடியாக ஸ்ருஷ்டி மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பு மருந்தின் ஐந்து டோஸ்களையும் எடுத்துக் கொண்டார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ருஷ்டிக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டது.
அவரது இரண்டு கால்களும் வலிமையை இழந்த நிலையில், மீண்டும் வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பல சோதனைகள் நடத்தப்பட்ட பின்பும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.
பரிசோதனை அறிக்கையில் அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஷிண்டே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மறுநாள் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சிருஷ்டி ஷிண்டேவின் மரணம், உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பும், அவருக்கு எப்படி ரேபிஸ் வந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ரேபிஸ் தடுப்பூசி தேவையான வெப்பநிலையில் வைக்கப்படவில்லையா என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.