தன் இறுதி சடங்கை ஒத்திகை பார்த்த பெண்! வாய்பிளக்கும் உறவினர்கள்!!

458

கரீபியனில்……….

கரீபியனில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வினோத நிகழ்வில் ஒரு பெண் தனது இறுதி சடங்கை ஒத்திகை பார்க்க சவப்பெட்டியில் படுத்துக் கொண்டார். 59 வயதான அந்த மூதாட்டியின் பெயர் மைரா அலோன்சோ (Mayra Alonzo).

இவர் தனது சொந்த இறுதி சடங்கிற்காக முழு ஆடை ஒத்திகை நடத்த முடிவு செய்தார். இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சாண்டியாகோ நகரில் உள்ள தனது வீட்டில் அவரது இறுதி சடங்கை ஏற்பாடு செய்தார்.

ஒரு சடலத்தின் தோற்றத்தை பிரதிபலிக்க இறுதி சடங்கின் போது பிறர் அணிவித்து விடும் சம்பிரதாய வெள்ளை நிற ஆடையை உயிரோடிருக்கும் போதே அணிந்து கொண்ட அலோன்சோ, ஏற்கனவே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டு இருந்த ஒரு சவப்பெட்டிக்குள் சென்று பல மணி நேரங்கள் படுத்து கொண்டார்.


மேலும் அவர் மூக்கு துவாரத்தின் இரு பக்கமும் சடலத்திற்கு வைப்பது போன்று பருத்தி பஞ்சை அடைத்து கொண்டு, தலையில் ஒரு மலர் கிரீடம் வைத்திருந்தார்.  உண்மையில் சடலம் போன்றே காட்சியளித்த அலோன்சோவை பார்த்து அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து கண்ணீருடன் விடை கொடுப்பது போல அழுது பாவனை செய்தனர்.

இருப்பினும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரால் உண்மையில் அழுவது போல நீண்ட நேரம் நடிக்க முடியவில்லை. அவர்களில் ஒரு சிலர் சிரித்து கொண்டும், தங்களது மொபைலில் புகைப்படங்களை எடுத்து கொண்டும் இருப்பதை காண முடிந்தது.

சவப்பெட்டி வாடகை செலவு, துக்கம் அனுசரிக்க வந்த விருந்தினர்களுக்கு சிற்றுண்டி வாங்கியது உட்பட இந்த போலி இறுதிச் சடங்கிற்கு சுமார் 710 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.63,000) செலவாகியுள்ளது.

தனது கனவை நனவாக்க இந்த இறுதி சடங்கை ஏற்பாடு செய்ய உதவிய தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டார்களுக்கு நன்றி தெரிவித்த அலோன்சோ, நான் நாளை இறந்தால், யாரும் எதையும் செய்ய நான் விரும்பவில்லை, ஏனென்றால் நான் வாழ்க்கையில் இதை எல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.

சவப்பெட்டிக்குள் இருப்பது சூடாகவும், தனிமையாகவும் இருப்பதால் அனைவரும் உடலை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள். நீண்ட நாள் வாழுங்கள், சீக்கிரம் இறப்பை தேடி செல்லாதீர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனிடையே இந்த வினோதமான இறுதி சடங்கு ஒத்திகையை பார்த்த பல நெட்டிசன்கள் எரிச்சலடைந்தனர் மற்றும் COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட மரணங்களுக்கு உலகெங்கிலும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துவிட்ட நேரத்தில் இது தேவையா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

எனினும் தொற்று நோய்களால் நிகழ்ந்து வரும் மரணங்கள் தான் தனது வாழ்க்கையில் ஒரு போலி இறுதி சடங்கை கொண்டாட தூண்டியதாக அலோன்சோ கூறியுள்ளார்.