தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரியப்பாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் தாயையும், தந்தையையும் இழந்த சிறுமியை வளர்ப்பதாக கூறி பெரியப்பாவே வேட்டையாடி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரையும், அவரது மனைவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய், சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். இதையடுத்து, சிறுமியின் தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியின் குடும்பத்தோடு சென்றுவிட்டார். அதன் பிறகு, தனது முதல் மனைவியின் பிள்ளைகளை அவர் கவனிக்கவில்லை.
இதனால் ஆதரவற்று இருந்த 11 வயது சிறுமியையும், அவரது 13 வயது அண்ணனையும் அவர்களின் பெரியப்பா செந்தில்குமார் வளர்த்து வந்தார். இதில் கடந்த ஆண்டு சிறுமியின் அண்ணன் ஊரில் உள்ள கண்மாயில் குளிக்கும் போது அதில் மூழ்கி உயிரிழந்தான். இதையடுத்து, சிறுமி மட்டும் பெரியப்பா செந்தில்குமார் வீட்டில் இருந்துள்ளார். செந்தில்குமார் ராணுவத்தில் பணிபுரிவதால் பெரியம்மாவின் பராமரிப்பில் சிறுமி இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியப்பா செந்தில்குமார் விடுப்பில் வந்துள்ளார். இந்த சூழலில், இரு தினங்களுக்கு முன்பு கழிவறையில் சிறுமி மயங்கி கிடந்ததாக கூறி, அவரது பெரியப்பா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு பெரியப்பா செந்தில்குமார் அழுது புரண்டுள்ளார். இதையடுத்து, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெரியப்பாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் தான் சிறுமியை பலாத்காரம் செய்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
அவரது வாக்குமூலத்தை அடுத்து, செந்தில் குமாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சந்திர பாண்டியையும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.