திருமணமான 20 நாட்களில் அதே தேவாலயத்தில் சடலமாக கிடத்தப்பட்ட காதல் தம்பதியர்!!

281

கடந்த நவம்பர் 30ம் தேதி தான் வருடக்கணக்கில் காதலித்து வந்த அனுவும் நிகிலும் அந்த தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். அதே தேவாலயத்தில் இன்று காலை இருவரும் சடலமாக கிடத்தப்பட்டிருந்த சம்பவம் தேவலாயத்தில் கண்ணீரை வரவழைத்தது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் முறிஞ்சாக்கல் என்ற இடத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் தேனிலவு முடித்து விட்டு ஊர் திரும்பி வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் நடந்த அதே தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இன்று காலை இவர்களது இறுதிசடங்குகள் நடைபெற்றது.

தம்பதிகள் அனு (28), நிகில் (29) ஆகிய இருவரும் மலேசியாவில் தேனிலவு முடிந்து வீடு திரும்பும் போது புனலூர்-மூவாட்டுபுழா மாநில நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அன்று விமான நிலையத்திற்கு தம்பதிகளை அழைத்து வர சென்றிருந்த இருவரது தந்தைகளும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஒரே திருச்சபையைச் சேர்ந்த நால்வரின் பூதவுடலும் அவர்களின் இல்லங்களிலும் பூங்காவு செயின்ட் மேரிஸ் மலங்கரை சிரியாக் கத்தோலிக்க தேவாலயத்திலும் பொதுமக்கள் அஞ்சலியைத் தொடர்ந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று காலை அவர்களது இல்லங்களில் இறுதிச் சடங்குகள் தொடங்கியது. முதலில் அனு, நிகில், பிஜு ஆகியோரின் உடல்கள் அனுவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிகிலின் வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

தேவாலயத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு இறுதிச் சடங்கு தொடங்கியது. இரு வீட்டாரும் சேர்ந்து சடங்குகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கும் அவர்களது இல்லங்கள் மற்றும் தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நிகில் மற்றும் அனு இருவரும் கடந்த நவம்பர் 30ம் தேதி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு 8 வருடங்களாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.