பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்நெஞ்சு தாய்… தாயாக மாறி காப்பாற்றிய திருநங்கை!!

222

சமீபகாலமாக பல தம்பதியினரும் குழந்தை பிறக்காமல் மருத்துவமனைகளிலும், கோயில்களிலும் சிகிச்சைக்காகவும், வேண்டுதலுக்காகவும் செல்வதை பார்க்கிறோம். அதேசூழலில், சிலர் பிறந்த பச்சிளங்குழந்தையை பரிதாபமாக பெற்றோர்கள் கைவிடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

பூமியில் இருக்கும் பல லட்ச உயிர்களுக்கு, இயற்கையாக இருக்கக்கூடிய உணர்வு தாய்மை உணர்வு. எந்த உயிரினமாக இருந்தாலும் தனது குழந்தைகளை தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி விட வேண்டும் என அந்த உயிரினங்கள் நினைக்கும்.

அது ஆடாக இருந்தாலும் சரி, மாடாக இருந்தாலும் சரி, காட்டில் வாழும் மான் , சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளாக இருந்தாலும் சரி அனைத்து உயிரினங்களுக்கும் தாய்மை என்பது பிரதானம். மனிதர்களும் தங்களுடைய அடுத்த தலைமுறைக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவது அத்தகைய தாய்மை உணர்வுதான்.

ஆனால் சில சமயங்களில் மனிதர்கள் மனநிலை சமநிலை தவறும் பொழுது, தாய்மை உணர்வை தூக்கி போட்டு விட்டு தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தையை அனாதையாக விட்டு விட்டு செல்லும் அவல நிலையும் இந்த பூமியில் தொடர்ந்து தான் நடைபெற்று வருகிறது.

அப்பொழுது தவறான தொடர்பால் பிறக்கக்கூடிய குழந்தைகளை, வெறுத்து ஒதுக்கும் மனித பிறவிகள் அந்த குழந்தைகளை வீதியில் வீசி விட்டு செல்கின்றனர்.

பிஞ்சு குழந்தைகளின் முகத்தைப் பார்த்தால் அனைத்து சோகமும் பறந்து விடும் என்பது தான் உண்மை. ஆனால் சிலர் தங்கள் சுயநலத்திற்காக அந்த பிஞ்சு குழந்தைகளை வீதியில் வீசிவிட்டு செல்லும் கொடூரங்களும் இந்த பூமியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


அந்த வகையில் செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பிறந்த 6 மணி நேரம் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையை திருநங்கை ஒருவர் மீது, காப்பாற்றி இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி – சென்னை மார்க்கமாக செல்லும் சாலை ஓரத்தில் குழந்தை பிறந்து 6 மணி நேரத்திற்குள் ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலை ஓரத்தில் வீசி சென்று உள்ளனர்.

சுங்கச்சாவடி அருகே நின்று இருந்த திருநங்கை ஒருவர், சாலை ஓரத்தில் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் இருக்கும் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநங்கை குழந்தையை அங்கிருந்து மீட்டார்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்து சாலை ஓரத்தில் வீசப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கல்நெஞ்சம் படைத்த தாய் குழந்தையை வீசிவிட்டு சென்ற நிலையில், தாய்மை உணர்வுடன் திருநங்கை அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த யாராவது குழந்தையை இங்கு கொண்டு வந்து வீசி விட்டு சென்றார்களா? அல்லது சாலையில் சென்றவர்கள் யாராவது குழந்தையை பெற்று இங்கு வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்நெஞ்சம் படைத்த தாய்க்கு கண்டனங்களும், குழந்தையை காப்பாற்றிய திருநங்கைக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன