பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த பெண் மருத்துவர்!!

161

பிரசவத்தின் போது அதிகளவு ரத்தப்போக்கு காரணமாக பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே சந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கபீர். இவரது மனைவி ஷீஜா. இந்த தம்பதியரின் மகள் பாத்திமா. மருத்துவரான பாத்திமா, திருச்சூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு முதுகலை மருத்துவமான எம்டி படித்து வருகிறார். இவரது கணவர் கொல்லம் மாவட்டம் ஓச்சாரா பகுதியைச் சேர்ந்தவர் சனுஜ்.

இந்நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பாத்திமா அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பிரசவத்தின் போது திடீரென பாத்திமாவுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட நிலையில் திடீரென அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாத்திமாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பாத்திமாவுக்கு பிறந்த குழந்தை முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்தின் போது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.