பெய்ரூட் வெடி விபத்தின்போது போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த மணப்பெண்ணின் திகில் அனுபவம்!!

798

பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தின்போது, போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த மணப்பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், துறைமுகத்தில் சேமித்துவைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் என்னும் ரசாயனம் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.

இந்த அதிபயங்கர விபத்திற்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், எப்படி ஜப்பானில் குண்டு வீசப்பட்டபின் அந்த பகுதியே மயானம்போல் காட்சியளித்ததோ, அதே போன்ற ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் விதத்தில், கட்டிடங்கள் எல்லாம் காணாமல் போய் வெட்டாந்தரையாக காணப்படும் காட்சிகளாக திகிலை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.

இந்நிலையில், தனது திருமண போட்டோஷூட்டிற்காக போஸ் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு மணப்பெண்ணுக்கு மரண பயத்தைக் காட்டியிருக்கிறது அந்த வெடி விபத்து. புகைப்படக் கலைஞர் மஹ்மூத் நகிப் ட்ரோன் ஒன்றின் உதவியுடன் மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்ணை புகைப்படம் எடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.


அவரது ட்ரோன், வெண்ணிற ஆடையில் தேவதையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் பெண்ணை சுற்றி வந்து அவருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பூச்செண்டை போகஸ் செய்யும்போது, திடீரென குண்டு வெடிக்கும் சத்தம் போல் ஒரு சத்தம் கேட்கிறது. மணப்பெண் அப்படியே தூக்கி வீசப்பட்டு பறந்துசெல்கிறார்.

அந்த வெடி விபத்தின் அதிர்வலைகளால் அவர் தூக்கி வீசப்பட, அருகிலிருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறி பறக்கின்றன. உடனே, பதறி ஓடோடி வரும் மணமகன் மணமகளை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்குள் ஓடுகிறார்.

சுற்றிலும் அலாரம் ஒலிக்க, இவ்வளவு நேரம் மணப்பெண்ணை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்படக்கலைஞர், வெடி விபத்தால் நேர்ந்த சேதங்களை படம் எடுக்கத் தொடங்குகிறார்.

மறுநாள் பேட்டியளித்த அந்த மணப்பெண், இன்று நான் புன்னகைக்கிறேன், நேற்று இந்த புன்னகை என்னிடம் காணாமல் போய்விட்டது, இறக்கப்போகிறேனா, எப்படி இறக்கப்போகிறேன் என்ற கேள்விகள்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தன என்கிறார்.

அவர் அனுபவித்த அந்த திகில், நிச்சயம் எத்தனை காலமானாலும், அந்த வீடியோவில் காணப்படும் காட்சியைப் போலவே அவரது மனதில் நிலைத்துவிடும் என்பது மட்டும் உறுதி…