பெற்றோர்களைக் கொன்று மொத்த வீட்டையும் கொளுத்திய மகன் : சொத்துக்களைத் தர மறுத்ததால் விபரீதம்!!

9

சொத்துக்களை மொத்தமாக தன் பெயருக்கு எழுதி தர மறுத்த பெற்றோர்களைக் கொன்று விட்டு, மொத்த வீட்டையும் கொளுத்தி விட்டு, அங்கிருந்து மகன் தப்பியோடிய நிலையில், போலீசார் மகனை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் (92). இவரது மனைவி பாரதி (90). இவர்களுக்கு விஜயன் என்ற மகன் உள்ள நிலையில், மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ராகவன் மற்றும் பாரதியின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில், விஜயன் தனது பெற்றோருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து, முழு சொத்தையும் தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் பெற்றோர் எப்படியும் உனக்குத் தானே வரப் போகிறது என்று அதற்கு மறுப்பு தெரிவித்து, பின்னர் தருவதாகக் கூறி வந்துள்ளனர். ஆனால் விஜயன் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து தனது பெற்றோரை கடுமையாக அடித்து சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர். அதற்குள், வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ​​ராகவனும் பாரதியும் கருகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.


இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வழக்கமாக பெற்றோருடன் வீட்டில் இருக்கும் விஜயன், வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், வீட்டிலிருந்து திடீரென விஜயன் காணாமல் போய்விட்டார். எங்கு சென்றார் என்பது இதுவரைத் தெரியவில்லை.

எனவே, தகராறு காரணமாக விஜயன் தனது பெற்றோரை அடித்து கொன்று விட்டு, வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள விஜயனை போலீசார் தேடி வருகின்றனர். பிரேத பரிசோதனையில் அறிக்கையில் கொலையா? அல்லது தீ விபத்தா என்பது தெரிய வரும் என்றனர்.