திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை காதலி ஓட்ட, காதலன் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் பதிவிட்ட காதல் ஜோடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் இளசுகளின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் வரம்பு மீறி லைக்ஸ் மற்றும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் முகம் சுளிக்கும் வகையிலும், ஆபத்தான வகையிலும் ரீல்ஸ் பதிவு செய்கின்றனர். இதுபோன்று ஒரு சம்பவம் திருப்பூரிலும் அரங்கேறி உள்ளது.
திருப்பூர் அவிநாசி அருகே உள்ள பழங்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புடவை அணிந்து கொண்டிருக்கும் இளம்பெண் ஒருவர் பைக் ஓட்டி செல்கிறார். அந்த பைக்கின் பெட்ரோல் டேங்க பகுதியில் வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டு அந்த பெண்ணை கட்டி பிடித்து கொஞ்சி வருகிறார்.
பின்னர், பின் இருக்கையில் அந்த வாலிபர் அமர்ந்து அந்த பெண்ணை கட்டி பிடித்து ரீல்ஸ் செய்கிறார். இதை அவர்களது நண்பர்கள் வீடியோ எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அந்த வாலிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது, சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் பலரும், வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் போக்குவரத்து விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமலும் ரீல்ஸ் செய்தவர்கள் மீது திருப்பூர் மாவட்ட போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீசார் வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இளம்பெண் வாலிபர் ஒருவருடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் செய்த வீடியோவுடன் பொதுமக்கள் பலரும் புகார் அளித்தனர்.
அதன்படி, விசாரணை நடத்தியதில் அந்த வாகனத்தின் உரிமையாளர் திருப்பூர் அருகே பழங்கரையை சேர்ந்த ராமர் என்பதும், வாகனத்தை ஓட்டியது அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி என்பதும், இவர்கள் காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, ஓட்டுனர் உரிமமின்றி வாகனத்தை ஓட்டுதல் மற்றும் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கியது என்பது உள்பட பிரிவுகளில் போக்குவரத்து விதி மீறியதால் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.