பைக்கில் லிஃப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணைக் கொன்ற நபர்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்!!

229

ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு கால்வாய்-க்கு அருகே தீடீரென பைக்கை நிறுத்திவிட்டு, அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டும் என முஜீப் ரஹ்மான் கூறியிருக்கிறார். இதையடுத்து பைக்கில் இருந்து இறங்கிய அனுவை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு பேராம்பிறை பகுதியைச் சேர்ந்தவர் அனு. வீட்டிலிருந்து புறப்பட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றவரைக் காணவில்லை என, அவரின் கணவர் பேராம்பிறை போலீஸில் கடந்த திங்கள்கிழமை புகார் அளித்திருந்தார்.

போலீஸார் விசாரணை நடத்தியதில், வாளூர் பகுதியில் உள்ள கால்வாயில் இறந்த நிலையில் அனுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கால் முட்டி அளவே தண்ணீர் உள்ள கால்வாயில் அவர் மூழ்கி இறக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் அவரது செயின், பிரேஸ்லெட், மோதிரம், கொலுசு ஆகியவை திருடப்பட்டிருந்தன.

எனவே அவர் நகைக்காக கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை பரிசோதித்ததில், ஹெல்மெட் அணிந்த ஒருவர் அனுவை பைக்கில் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

அந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி, நீண்ட தேடலுக்குப் பிறகு மலப்புறம் கொண்டோட்டி பகுதியைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்மீது ஏற்கெனவே சுமார் 55 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.


இந்தக் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி கோழிக்கோடு ரூரல் எஸ்.பி அரவிந்த் சுகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனுவுக்கு கடந்த திங்கள்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குச் செல்வதாக கணவனுக்கு போன் செய்துவிட்டு, காலை சுமார் 9 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்பதால், அனு பேருந்துக்காக சாலையில் நின்றுகொண்டிருந்தார்.

அவரது அவசரத்தைப் பார்த்து, ஹெல்மெட் அணிந்தபடி சென்ற முஜீப் ரஹ்மான், பைக்கை நிறுத்தி அனுவிடம் நல்லவர்போல் பேசி லிஃப்ட் கொடுத்துள்ளார். அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதால், பைக்கில் ஏறியுள்ளார் அனு. வாளூர் பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு கால்வாய்-க்கு அருகே தீடீரென பைக்கை நிறுத்திவிட்டு, அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டும் என முஜீப் ரஹ்மான் கூறியிருக்கிறார்.

இதையடுத்து பைக்கில் இருந்து இறங்கிய அனுவை தாக்கிக் கீழே தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்ட அனு நினைவிழந்துள்ளார்.

அனுவை அப்படியே கால்வாய்க்குள் இழுத்துப்போட்டதுடன், அவரது தலையை காலால் மிதித்து தண்ணீருக்குள் அமுக்கி வைத்துள்ளார். இதில் அனு துடிதுடித்து இறந்தார். அனுவின் நகைகளை பறித்த முஜீப் ரஹ்மான், அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார்.

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய மனைவியை காணவில்லையே என பல இடங்களிலும் தேடிய அனுவின் கணவர், பேராம்பிறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி, கால்வாயில் கிடந்த அனுவின் உடலை கண்டுபிடித்தனர்.

கால் முட்டி அளவே தண்ணீர் கிடந்த கால்வாயில் அவர் விழுந்து இறக்க வாய்ப்பு இல்லை என்பதால், தனி டீம் போட்டு விசாரணை நடத்தினோம். அந்த பகுதியில் ஒரு பைக் வந்து சென்றதற்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. பைக்கை கண்டறிவதற்காக விசாரணை மேற்கொண்டோம்.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை பரிசோதித்து பைக் நம்பரை கண்டறிந்தோம். அந்த பைக் கண்ணூர், மட்டனூர் பகுதியில் திருட்டுப்போன பைக் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. அந்த பைக் நம்பரை வைத்து விசாரித்தபோது, அந்த பைக்கை காணவில்லை என்று அதன் உரிமையாளர் போலீஸில் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார்.

சுமார் நூறுக்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திய பிறகுதான், கொலைசெய்தது மலப்புறம் கொண்டோட்டி பகுதியை சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்பது தெளிவானது. முஜீப் கொள்ளையடிக்கும் நகைகளை விற்பனை செய்ய உதவிய அபுபக்கர் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்” என்றார்.