ஸ்பெயின்..
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் நிக்கோல் எல்கபாஸ். 44 வயதான இவர் தனக்கு கருப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தனக்கு உதவும்படியும் ஆன்லைன் மூலமாக நிதி திரட்டும் நிறுவனத்தை நாடியிருக்கிறார். இதனை தொடர்ந்து எல்கபாஸ்-ன் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவிடப்பட்டு அவரது சிகிச்சைக்காக அந்நிறுவனம் பணம் திரட்டி வந்திருக்கிறது.
தனக்கு 6 சுற்று கீமோ சிகிச்சையும், 3 அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டு முதல் எல்கபாஸ்க்கு நிதி திரட்டும் பணியை துவங்கியுள்ளது அந்த நிறுவனம். இதன்மூலம் 700 பேர் எல்கபாஸ்-ன் சிகிச்சைக்கு பணம் அளித்திருக்கின்றனர். இப்படி 45,000 யூரோக்கள் சேர்ந்துள்ளன. இந்த மொத்த பணமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே புற்றுநோய் நிபுணர் ஒருவர் எல்கபாஸ்-ன் மருத்துவ குறிப்பை வாசித்துள்ளார். அப்போது ஏதோ ஒன்று தவறாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தேடிய போது, எல்கபாஸ் தன்னுடைய தாய் டோலாரஸ்-ன் புற்றுநோய் குறித்த மருத்துவ குறிப்புகளை தன்னுடையது என்று கூறி, பணம் சேர்த்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து, தனக்கு கேன்சர் இருப்பதாக பொய் கூறி அல்கபாஸ் பணம் வசூலித்தது வெளியுலகத்திற்கு தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் அல்கபாஸிடம் கேள்வி கேட்டிருக்கிறது. அப்போது, அனைத்து பணத்தையும் செலவழித்துவிட்டதாக கூறியிருக்கிறார் அவர். மேலும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்டு மொத்த பணத்தையும் அவர் செலவழித்ததும் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, ஆன்லைன் மூலமாக திரட்டிய மொத்த பணத்தையும் திருப்பியளிக்குமாறு அந்நிறுவனம் கேட்டும் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதால் 5 யூரோக்களை மட்டும் திரும்பி செலுத்துமாறு கேட்டிருக்கிறது.
இதனால், எல்கபாஸ்-ன் சிகிச்சைக்காக உதவியவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப அளித்திருக்கிறது அந்த நிறுவனம். இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்,”2019 ஆம் ஆண்டே பங்களிப்பு செய்த மக்களுக்கு அவர்களின் பணம் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. கருணையின் அடிப்படையில் உதவ முன்வந்த மக்களை எல்கபாஸ் ஏமாற்றியுள்ளார்” என்றார்.