காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இந்தப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து ராஜீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மக்களை மீட்புக் குழுவினர், படகு மூலம் மீட்டு சென்று நிவாரணமுகாம்களில் தங்க வைத்தனர்.
மழைநீர் வடிந்த பிறகு அவரவர் வீட்டிற்கு திரும்பினர். அப்படி வந்து பார்த்தபோது, அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியிருந்தது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கைரேகைகளை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெள்ள பாதிப்பால் வீட்டை விட்டு வெளியேறியபோது அரங்கேறிய கொள்ளை சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகையை பறிகொடுத்த ஜெயஸ்ரீ எங்கள் வீட்டில் இருந்த 20 சவரன் நகைகளையும், ஒன்றரை லட்சம் பணத்தையும் திருடிச் சென்று விட்டனர்.
உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தான் வெளியே போனோம். நாங்களே மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறோம். யார் எடுத்திருந்தாலும் தயவு செய்து எங்களது நகைகளையும், பணத்தையும் கொடுத்துடுங்க என கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்தபதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.