மகா கும்பமேளாவில் வைரலாகும் 16 வயது பெண் மோனாலிசா.., யார் இவர்?

13

மகா கும்பமேளா நிகழ்வில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

யார் இந்த பெண்?

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில் இதுவரை சுமார் 8.81 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த ஆண்டு மொத்தமாக 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், சில மனிதர்கள் வைரலாகி வருகின்றனர். அந்தவகையில், பஞ்சதஷனம் ஆவஹன் அகாடாவின் மகாமண்டலேஷ்வர் அருண் கிரி என்ற சாமியார் 6.7 கிலோ எடை கொண்ட நகைகள் அணிந்து வந்து வைரலானார்.


அதேபோல, கோல்டன் பாபா’ (தங்க பாபா) என்று அழைக்கப்படும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே.நாரயண் கிரி என்பவரும் 4 கிலோ எடை கொண்ட நகைகள் அணிந்து வந்து வைரலானார்.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதனால், மகா கும்பமேளாவில் அவரை பேட்டி எடுக்க பல ஊடகங்களும், செல்பி எடுக்க பலரும் அலை மோதுகின்றனர்.

இன்னும் சிலர் இவரை லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்துடன் ஒற்றுமை இருப்பதாக கூறுகின்றனர்.