மதுரையில் மயங்கி விழுந்த மேடை பாடகி கவிதா.. பிரேத பரிசோதனையால் சிக்கிய கணவன்!!

477

மதுரையில் தனது மனைவியான மேடை பாடகியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவு என நாடகமாடிய கணவர், பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளியான தகவலால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.

மதுரை மாநகராட்சி மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த 37 வயதாகும் நாகராஜின் மனைவி கவிதா, இவருக்கு 34 வயது ஆகிறது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாடி வரும் பாடகியான கவிதா, இசைக்குழு ஒன்றின் மூலம் மேடைகளில் பாடி சம்பாதித்து வந்தார்.

அந்த இசைக்குழுவில் தான் நாகராஜ் மைக்செட் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இ்ந்த நிலையில் சமீப காலமாக கவிதாவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்ததாம். அதற்காக கண் மருத்துவமனையில் பரிசோதித்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரத்தம் கக்கிய நிலையில் கவிதா இறந்து கிடந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது கவிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் மதிச்சியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். கவிதா உடலில் காயங்கள் இல்லை என்பதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்து விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதே நேரத்தில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது. அந்த அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் இறந்து இருப்பது உறுதியாகி உள்ளது.. இது குறித்து போலீசாருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே நாகராஜை போலீசார் அழைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.


குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கவிதாவை கொன்றதுடன், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக நாகராஜ் நாடகமாடியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.