கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளைச் சப்ளை செய்து வந்ததால், ஆத்திரத்தில் போதை மருந்துகளை சப்ளை செய்யும் கும்பலின் உதவியுடன் மனைவியைக் கொலைச் செய்த பாதிரியார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே குளோபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் வைஷாலி (33). வைஷாலிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020ல் பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் இருவரும் குடியேறிய நிலையில், விமல்ராஜ் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி மாலை வைஷாலி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு விமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
வைஷாலியின் கழுத்தில் காயம் இருந்ததால், அவரது பெற்றோரும், சகோதரரும் அதிர்ச்சியடைந்து இது குறித்து தாழம்பூர் போலீசாரிடம் புகாரளித்தனர்.
இதையடுத்து போலீசாரின் விசாரணையில், திருமணம் ஆனதிலிருந்தே தனக்கும், தனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று தகராறு முற்றியதில் வைஷாலியை அடித்துக் கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து நெரித்துக் கொலைச் செய்து நாடகமாடியதாகவும் விமல்ராஜ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரை அப்போது கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தனது மகள் கொலையில் கூடுதல் நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறி வைஷாலியின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை மறு விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை சிறப்பு விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகின.
பாதிரியார் விமல்ராஜூக்கு பொன்மார் பகுதியில் வசித்து வந்த ஜெபஷீலா (30) என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்துள்ளனர்.
மும்பையில் இருந்த போது விமல்ராஜுக்கு பழக்கமான மெடிக்கல் ஷாப் ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து பாதிரியார் விமல்ராஜ் இந்த பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
விமல்ராஜ் வீட்டில் கட்டுக்கட்டாக சுமார் 2,800 போதை மாத்திரைகளை இருந்த நிலையில், இது குறித்து அவரது மனைவி வைஷாலி, அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
பொதுமக்களுக்கு விநியோகிக்க அவற்றை வைத்திருப்பதாக விமல்ராஜ் கூறிய பதில் திருப்தியில்லாததால், சந்தேகத்துடன் தனது சகோதரர் மூலமாக மும்பையில் விசாரித்துள்ளார். அப்போது அவை அனைத்தும் போதை மாத்திரைகள் என்று தெரிய வந்துள்ளது.
உடனடியாக இதையெல்லாம் நிறுத்தாவிட்டால், தான் காவல் நிலையத்தில் கூறிவிடுவேன் என்று வைஷாலி, பாதிரியார் விமல்ராஜை மிரட்டி அவரை திருத்த முயன்றுள்ளார்.
மனைவி மிரட்டுவது குறித்து ஜெபஷீலாவிடம் கூறிய விமல்ராஜ், இருவரும் சேர்ந்து வைஷாலியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த கோவிலம்பாக்கம் தினேஷ் (23), சந்திரசேகர் (19), அரவிந்த் (23), அஜய் (24), நங்கநல்லூரைச் சேர்ந்த மைக்கேல் (33), பொன்மார் மலைத்தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற சங்கர் (44), ஆகியோர் உதவியுடன் பாதிரியார் விமல்ராஜ் தனது மனைவி வைஷாலியை கொலை செய்து நாடகம் ஆடியதும் சிறப்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாழம்பூர் போலீசார் இதையடுத்து மீண்டும் புதிதாக வழக்குப் பதிவு செய்து பாதிரியார் விமல்ராஜின் கள்ளக்காதலி ஜெபஷீலா உட்பட 7 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்ட தினேஷ் மீது 6 வழக்குகளும், அரவிந்த் மீது 6 வழக்குகளும், அஜய் மீது 20 வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.