அமெரிக்காவில் மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால் வாங்கிய கணவனுக்கு, 50 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வர முடியாத அளவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில், கணவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடி, பின்னர் அவரின் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்ற இரண்டாவது நாளிலேயே செக்ஸ் டால் உட்பட பலவற்றை வாங்கிய உண்மை வெளியில் தெரியவந்திருக்கிறது.
முன்னதாக, கடந்த 2019-ல் கணவன் கோல்பி ட்ரிக்கிள் (Colby Trickle), ஹேஸ் (Hays) நகரிலுள்ள தன்னுடைய வீட்டிலிருந்து 911 என்ற நம்பருக்கு அழைத்து தன்னுடைய மனைவி கிறிஸ்டன் ட்ரிக்கிள் (Kristen Trickle) தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த போலீஸ் அதிகாரியொருவர் அவருடன் பேசிய பிறகு இது கொலையாக இருக்கும் என சந்தேகித்தார்.
இருப்பினும், கிறிஸ்டன் மரணமடைந்து மூன்று நாள்களுக்குப் பிறகு இது கொலையல்ல தற்கொலைதான் என உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் லைல் நூர்தோக் (Lyle Noordhoek) தெரிவித்தார். ஆனாலும், விசாரணை அதிகாரிகள் இந்த சம்பவத்தை விசாரித்துவந்தனர். பின்னர், கிறிஸ்டன் இறந்து 21 மாதங்களுக்குப் பிறகு 2021 ஜுலை மாதம் முதல்நிலை கொலை மற்றும் சட்ட அமலாக்கத்தில் தலையிட்டதாக அவர் கணவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
அதிகாரிகளின் விசாரணையில், கிறிஸ்டனின் பெயரிலிருந்த 1,20,000 டாலர் மதிப்பிலான அதாவது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை (life insurance policies) கோல்பி பணமாக்கியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, இன்சூரன்ஸ் பணம் பெற்ற இரண்டு நாள்களுக்குப் பிறகு ஆள் உயர செக்ஸ் டால் (sex doll) ஒன்றை அவர் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, அவரின் அத்தை டெலின் ரைஸ் (Delynn Rice), “கிறிஸ்டனின் இன்சூரன்ஸ் பணத்தை அவர் செக்ஸ் டால் வாங்குவதற்குப் பயன்படுத்தியதைக் கண்டு நான் திகைத்துப்போனேன். இது கிறிஸ்டனுக்கு மாற்றாக அவர் வாங்கியது போல் தெரிகிறது” என்றார். கோல்பி இந்த செக்ஸ் டால் மட்டுமல்லாது கடனை அடைப்பது, இசைக்கருவிகளை வாங்குவது என ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழித்திருக்கிறார்.
இன்சூரன்ஸ் பணம் பெற்ற எட்டு மாதங்களிலேயே மொத்தத்தையும் அவர் செலவழித்துவிட்டதாக எல்லிஸ் கவுண்டி அட்டர்னி ஆரோன் கன்னிகாம் (Aaron Cunnigham) வெளிப்படுத்தினார். 2023 செப்டம்பரில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், கோல்பி செக்ஸ் டால் வாங்கியதை நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் தெரியப்படுத்தினர்.
அதேசமயம், கோல்பிக்காக ஆஜரான அவரின் தாயார் டினா க்ரூட்ஸர் (Tina Kreutzer), கிறிஸ்டனின் மரணத்துக்குப் பிறகு தன் மகன் தூக்கமின்மைக்கு ஆளானதாகவும், ஒரு ஆறுதலுக்காக செக்ஸ் டால் வாங்கியதாகவும் தெரிவித்தார். இறுதியாக, கிறிஸ்டன் மரணமடைந்து நான்காவது ஆண்டான 2023-ல் நவம்பர் மாதம், கோல்பியை குற்றவாளி என உறுதிப்படுத்திய நடுவர் நீதிமன்றம், 50 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வர முடியாத அளவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.