மயக்க ஊசிபோட்டு இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்த வழக்கு : வரதட்சணை கேட்ட சீனியர் மருத்துவர் கைது!!

307

கேரள….

கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷகானா. திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்தார். இவர், அதிக அளவு மயக்க ஊசி செலுத்திக்கொண்டு, கடந்த 5-ம் தேதி இரவு தற்கொலை செய்துகொண்டார். ‘தொடர்ந்து படிக்கவும், திருமணத்துக்கும் பணம் வேண்டும்.

எல்லோருக்கும் பணம் மட்டும் போதும். எல்லாவற்றையும்விட பணம்தான் பெரிது’ எனக் கடிதம் எழுதிவைத்திருந்தார் ஷகானா. இது குறித்து மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். இது பற்றி ஷகானாவின் சகோதரர் ஜாஸிம் நாஸ், “ஷகானாவுக்கும், அவருடன் முதுகலை மருத்துவம் படிக்கும் சீனியரான கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ரூவைஸுக்கும் திருமணம் பேசிவைக்கப்பட்டிருந்தது.

ரூவைஸின் வீட்டிலிருந்துதான் திருமணம் பற்றி முதலில் பேசினர். இந்த நிலையில் ரூவைஸின் வீட்டுக்குச் சென்று நாங்கள் பேசினோம். அப்போது, 50 சவரன் நகைகள், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் கார் ஆகியவை கொடுக்கலாம் என நாங்கள் சொன்னோம். ஆனால், அவர்கள் எங்களால் கொடுக்க முடியாத அளவுக்கு வரதட்சணை கேட்டனர். பெற்றோரின் வார்த்தைகளை மீறி ரூவைஸால் செயல்பட முடியவில்லை. இதனால் அந்தத் திருமணம் வேண்டாம் என்ற மனநிலைக்கு நாங்கள் வந்தோம். ஆனால், ஏற்கெனவே பழக்கம் இருந்ததால் ஷகானாவுக்கு ரூவைஸை விடுவதற்கு மனம் இல்லை.


வரதட்சணை காரணமாக திருமணம் தடைப்படும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனதளவில் உடைந்துபோனார் ஷகானா. ரூவைஸ் அதன் பின்னர் ஷகானாவிடம் பேசினாரா என்பது பற்றித் தெரியவில்லை. இந்த நிலையில் ஷகானா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஷகானா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் ஷகானாவின் சகோதரர் ஜாஸிம் நாஸ்
தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் ஷகானாவின் சகோதரர் ஜாஸிம் நாஸ்
டாக்டர் ரூவைஸ் கேரள முதுகலை மருத்துவர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். இந்த நிலையில், முதுகலை மருத்துவர் சங்கத்திலிருந்து டாக்டர் ரூவைஸ் நீக்கப்பட்டிருக்கிறார்.

மகளிர் ஆணையம், சிறுபான்மை ஆணையம் உள்ளிட்டவை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகின்றன. ரூவைஸ் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ரூவைஸை மெடிக்கல் காலேஜ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியதுடன், அவரைக் கைதுசெய்தனர். பெண் மருத்துவர் ஷகானாவிடம் சீனியர் மருத்துவர் ரூவைஸ் வரதட்சணை கேட்டதற்கான ஆதாரங்கள் செல்போனில் கண்டறியப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மருத்துவர் ரூவைஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `இது மிகவும் சீரியஸான விஷயம். இதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருத்துவக் கல்வித்துறை இயக்குநருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இயக்குநருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தினார். இதையடுத்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் முதல்வர் விசாரணை நடத்தி, மருத்துவர் ரூவைஸை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.