மருத்துவமனையில் உயிருக்கு போராடிய கணவன்… கடைசி சந்திப்பை இழந்த மனைவி… விமானம் ரத்தானதால் சோகம்!!

296

தனியார் விமானம் தனது பயண சேவையை திடீரென ரத்து செய்ததில், மஸ்கட்டில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த கணவனை காப்பாற்றும் வாய்ப்பை அவரது மனைவி இழந்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரிதா (24). இவரது கணவன் நம்பி ராஜேஷ் ஓமனில் உள்ள மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். திடீர் மாரடைப்பு காரணமாக மஸ்கட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்ரிதாவுக்கு அண்மையில் தகவல் வந்தது.

பதறிப்போன அம்ரிதா, கணவருக்கு மருத்துவமனையில் உதவியாக இருக்கும் பொருட்டு மஸ்கட் விமானப் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்தார்.

அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த அம்ரிதா குடும்பத்தினர், அவரை வழியனுப்ப திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மே 8-ம் தேதி அன்று சென்றனர். அவர்களுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.

அன்று காலை 8.30 மணிக்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போதிய பணியாளர்கள் இல்லை என்ற காரணத்தை முன்வைத்து, கடைசி நேரத்தில் விமான பயணத்தை ரத்து செய்தது. அதன்படி அடுத்த நாளுக்கு அம்ரிதாவின் விமான டிக்கெட்டை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மாற்றித்தந்தது.


ஆனால் அடுத்த நாளும் அதே காரணத்தை முன்வைத்து விமான சேவை ரத்தானது. அம்ரிதா துடித்துப்போனார். இதனிடையே மஸ்கட் மருத்துவமனையிலிருந்து தொடர்பு கொண்ட ராஜேஷ் தான் நலமுடன் இருப்பதாகவும், மே 11-ம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மே 16-ம் தேதி அன்று திருவனந்தபுரத்துக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் அம்ரிதா பெருமூச்சு விட்டார். ஆனால் அடுத்த இரண்டாம் நாளில் ராஜேஷ் எதிர்பாரா விதமாக தனது கடைசி மூச்சை அங்கே இழந்திருக்கிறார்.

ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்த தகவல் அம்ரிதாவுக்கு மே 13-ம் தேதி அன்று வந்தது. மே 8-ம் தேதி அன்று விமானம் ரத்தாகாது இருப்பின், ‘மஸ்கட் மருத்துவமனை தனிமையில் தவித்த கணவன் ராஜேஷை உடனிருந்து எப்படியாவது காப்பாற்றி இருக்கலாம்’ என இப்போது அம்ரிதா புலம்பிக்கொண்டிருக்கிறார்.

போதிய பணியாளர் இல்லை என்ற காரணத்தை முன்வைத்து விமான சேவையை ரத்தானதில், கடைசி நேரத்தில் கணவரை காப்பாற்ற முடியாமல் போனதாக அம்ரிதா வருந்தி வருகிறார்.

அம்ரிதாவின் விமானப் பயண டிக்கெட் ரத்தானதில் அதற்கான தொகையும் அவருக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனிடையே கணவரின் சடலத்துக்காக தற்போது அதே திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அம்ரிதா சோகத்துடன் காத்திருக்கிறார்.