மருந்துக்கும் உணவுக்கும் வழியில்லை: வெளிநாட்டில் புற்றுநோயால் அவதிப்படும் இலங்கையர்!!

339

ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் புற்றுநோயால் அவதிப்படும் இலங்கையர் ஒருவர் தமது சிகிச்சைக்கான தொகையை திரட்ட போராட்டி வருகிறார். இலங்கையின் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் 45 வயதான குணசிறி குமரா.

துபாய் மாகாணத்தில் செயல்பட்டுவரும் ஹொட்டல் குழுமம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அக்ரல் மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக அவரது இடது கால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டு, அவரால் நடமாடவே முடியாத அளவுக்கு படுக்க வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள மனைவியும் இரு பிள்ளைகளும் இவரது ஒரே ஒரு ஊதியத்தை நம்பி இருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நிதி நெருக்கடி காரணமாக இவரது ஊதியத்தில் 40 சதவீதம் வரை குறைத்ததால் இவரது ஊதியமானது தற்போது 2,000 திர்ஹம் என குறைந்துள்ளது.


மட்டுமின்றி அறை வாடகை மட்டும் ஆயிரம் திர்ஹம் என கூறும் அவர் மருத்துவ செலவுக்கும் உணவுக்கும் அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார். தற்போது சிகிச்சைக்கான செலவு மட்டும் மாதம் 3,500 திர்ஹம் வரை தேவைப்படுகிறது என கூறும் குமரா,

மொத்தமும் தம்முடன் தங்கியிருக்கும் நண்பர்களையே தற்போது நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்கிறார். இதனிடையே, குமராவின் நிலை அறிந்து All Kerala Pravasi Association என்ற அமைப்பு கடந்த மே மாதம் முதல் சிகிச்சை செலவை ஏற்க முன்வந்துள்ளது. தற்போது கால் பாதத்தில் மட்டுமே இருந்த புற்றுநோய் வீக்கம் உடல் முழுவதும் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.