இந்தியாவில் மனைவியை கொலை செய்த கணவன், ஒன்றும் தெரியாதது போல் தனது அம்மாவுடன் தப்பிய நிலையில், 18 மாதங்களுக்கு பின் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் போய்சார் என்ற இடத்தில் உள்ள வாடகை குடியிருப்பு வீட்டின் உரிமையாளர், பல மாதமாக பூட்டியிருந்த வீட்டை வேறொருவருக்கு வாடகைக்கு கொடுப்பதற்காக கடந்த 19-ஆம் திகதி திறந்து பார்த்தார்.
அப்போது வீட்டிற்குள் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில், எலும்பு கூடாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி, தடயவியல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் குடியிருந்த 20 வயதான புல்பூல் ஜா என்ற இளம்பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. புல்பூல் ஜாவின் கணவரும், மாமியாரும் அவரைக் கொலை செய்துவிட்டு, அரியானாவுக்கு தப்பிச் சென்றதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, புல்பூல் ஜாவின் கணவர் தீபக் ஜா, அவரது தந்தை பவன் ஜா, தாய் பச்சி தேவி மற்றும் சகோதரி நித்து சிங் ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாட்டீல் கூறுகையில், புல்பூல் ஜாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டின் இறுதியில் புல்பூல் ஜா கொடுத்த புகாரில், தனது மாமியார் தன்னை துன்புறுத்துவதாகவும், சித்திரவதை செய்வதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், அவர் அந்த வழக்கை வாபஸ் பெறும் படி அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் சமரசம் ஏற்படவே, வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் புல்பூல் ஜாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்க, வாடகை வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் புல்பூல் ஜாவின் உடலை திணித்து அடைத்து வைத்துள்ளனர்.
அதன் பின், தங்களது சொந்த மாநிலமான அரியானாவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்றுள்ளனர். வீட்டை விட்டு சென்ற போதும், வீட்டின் உரிமையாளருக்கு அவர்கள் தொடர்ந்து வாடகை கொடுத்து வந்துள்ளனர்.
இந்த ஊரடங்கு காரணமாக அவர்கள் அதன் பின் வாடகை கொடுக்காமல் இருக்க, அதன் பின்னரே வீட்டின் உரிமையாளர் வேறொருவருக்கு வாடகை விட வீட்டை திறந்து பார்த்த போது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், கடந்த 2019 பிப்ரவரியில் புல்பூல் ஜா கொல்லப்பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பின், புல்பூல் ஜா கொலை செய்யப்பட்டது தற்போது அம்பலமாகி உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட புல்பூல் ஜாவின் கணவர் தீபக் ஜா, அவரது தந்தை பவன் ஜா, தாய் பச்சி தேவி மற்றும் சகோதரி நித்து சிங் ஆகியோரை அரியானாவில் இருந்து போய்சருக்கு அழைத்து வந்தோம். விசாரணையில், மருமகள் புல்பூல் ஜாவை கொன்றதை 4 பேரும் ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.