தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் சாலைவசதிகள் இன்னும் சரியாக அமைக்கப்படவில்லை இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி சுமார் ஆறு கிமீ தூரம் ஆபத்தான ஒற்றையடி பாதையில் கிராம மக்கள் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் மாரியம்மாள் என்ற பெண் இதே போல டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் சாலை வசதி இல்லாததால் இதுபோல உயிரிழப்புகள் தொடர்வதாக அந்தப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக அளவில் பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்துவருகிறது. கொடைக்கானல் பகுதியில் மட்டும் தான் அந்த வசதிகள் அனைத்துமே.
மேல் மலைப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்கள் பலவற்றுக்கு இன்று வரை சாலை வசதியும், மின்சார வசதியும் கூட அறவே கிடையாது.
அவசர காலங்களில் கூட கொடைக்கானல் அல்லது பெரியகுளத்துக்கு செல்ல கால்நடையாகவே தான் பயணம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட பகுதிகளில் ஒன்று தான் வெள்ளக்கெவி.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர்,பெரியூர்,சின்னூர் காலனி,கடப்பாறை குழி உட்பட மலைக்கிராமங்கள் உள்ளன.
இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருந்து கரடு முரடான வனப் பகுதியினை கடந்து சென்றும் தங்களது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனையில் சிகிச்சை, அவசர கால தேவை போன்ற இதர தேவைகளுக்கு பெரியகுளம் பகுதியையும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை டோலி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல்கின்றனர்.
இதனால் ஒரு சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டதாக இப்பகுதி கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வெள்ளகெவி கிராமத்தில் இருந்து அவசர தேவைக்கு கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கிலோ மீட்டர் தூரம் வன பகுதிகளின் நடுவே ஆபத்தான முறையில் நடந்து செல்ல வேண்டும்.
இங்கு விளைவிக்கும் விளை பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் தலை சுமையாகவும் , பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் கொண்டு சென்று விற்று தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளகெவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மேகலா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் அடர்ந்த வன பகுதிகளுக்கு இடையே மேகலாவை டோலி கட்டி கும்பக்கரை வழியாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
துரதிருஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது திண்டுக்கல்லுக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேலாவது அந்த கிராமத்திற்கு சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்