செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 கல்லூரி மாணவர்களைப் போலீசார் தேடி வருகினறனர்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). சென்னை அண்ணாநகர் முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வரும் இவரும், 10ம் வகுப்பு முடித்து விட்டு பூந்தமல்லி பகுதியில் வேலை பார்த்து வரும் இவரது நண்பர் சையது ரியாஷ்(19).
என்பவரும் நண்பர்களான ரக்ஷித் (19), ஆகாஷ் (19) மற்றும் தோழி ஆரியா (19) ஆகியோருடன் சேர்ந்து மெரினா கடற்கரைக்குச் செல்வதாக கூறிவிட்டு ஒரு வாடகை காரில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் 5 பேரும் மாமல்லபுரம் மீனவர் பகுதி கடலுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு இவர்கள் 5 பேரும் சேர்ந்து கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாரத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி கிரீஷ் கேசவ், சையது ரியாஸ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனைக் கண்ட இவர்களின் பெண் தோழி ஆரியா மற்றும் ரக்ஷித் ஆகிய 2 பேரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மீனவர் ஒருவர் விரைந்து செயல்பட்டு ஆகாஷை மட்டும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.
ராட்சத அலையில் சிக்கிய மற்ற 2 மாணவர்களும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவர்களை மீட்க முடியாமல் மீனவர் கரைக்கு திரும்பி வந்து விட்டார்.
இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கடலோர காவல் படை எஸ்ஐ ராஜேந்திரன், மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், உயிர் காப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் அப்பகுதி மீனவர்கள் படகில் சென்று ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் தேடிய பிறகும் மாணவர்களை மீட்க முடியவில்லை. இதனையடுத்து, கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட கிரீஷ் கேசவ், சையது ரியாஸ் ஆகியோரின் பெற்றோர்களுக்கு போலீசார் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
மேலும், காணாமல் போன மாணவர்களை அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் சட்டம்-ஒழுங்கு போலீசார், கடலோர காவல் படை போலீசார், தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.