சென்னை…
சென்னை சூளை சுப்பா நாயுடு தெருவைச் சேர்ந்த 70 வயதான காமாட்சியம்மாள் என்பவர், பழைய வண்ணாரப்பேட்டை ரத்தின சபாபதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாநகர பேருந்தில் வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க 3 பெண்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். காமாட்சியம்மாள் அருகில் ஒரு பெண் பேச்சு கொடுத்த படியே வந்துள்ளார்.
பின்னர் வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கு இருந்து ஆட்டோவில் நான்கு பேரும் சென்றுள்ளனர். ஆட்டோவில் இருந்து இறங்கிய காமாட்சியம்மாள், தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் குறித்து காமாட்சியம்மாள் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது . இதேபோல சென்னை மாதவரத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மனைவி ஜெயலட்சுமி ஆட்டோவில் பயணம் செய்யும் போது அதே ஆட்டோவில் மூன்று பெண்கள் ஜெயலட்சுமியிடம் பேச்சு கொடுத்தபடியே பயணம் செய்து 8 சவரன் தங்க நகையை அறுத்துச் சென்றுள்ளனர் இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திருவொற்றியூர் தண்டையார்பேட்டை, மாதவரம் பகுதிகளில் மாநகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளைக் கொள்ளை அடித்து வருவதாக காவல் நிலையங்களில் புகார்கள் அடுத்தடுத்து பதிவாகின.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் சீதா தலைமையில் 21 பெண் போலீசார் மாறுவேடத்தில் களமிறக்கப்பட்டனர்.
அந்த போலீசார் ஷேர் ஆட்டோ , மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தாங்கள் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த திருட்டு பெண்களை ஒப்பிட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தங்கசாலை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக மூன்று பெண்கள் ஆட்டோவில் வந்து இறங்கி நோட்டம் விடுவதை கண்ட தனிப்படை போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அந்த 3 திருட்டு சுந்தரிகளும் இவர்கள் தான் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
அவர்கள் 3 பேரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தி தோப்பை சேர்ந்த கௌரி, சாந்தி, சின்னத்தாயி என்பதும் கடந்த 6 வருடங்களாக சென்னைக்கு வந்து, ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் அரசு மற்றும் மாநகரப் பேருந்துகளிலும், ஷேர்ஆட்டோக்களிலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இந்த திருட்டு கும்பல், அதில் பயணிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து, அவர்களது கவனத்தை திசைதிருப்பி அவர்கள் அணிந்திருக்கும் நகையை அறுத்து திருடிசென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நடந்து செல்லும் மூதட்டிகளிடம் நகையை கழற்றி பாதுகாப்பாக வைக்கு மாறு நடித்து பின்னர் அவர்களிடமிருந்து கவனத்தை திசைதிருப்பி நகைகளை கொள்ளை அடிப்பதும் இந்த கும்பலின் வாடிக்கையாக இருந்துள்ளது.
முன்பு போல இல்லாமல் தற்போது நகர் முழுவதும் சிசிடிவி காமிரா கண்காணிப்பில் உள்ளதால், இது போன்ற ஜேப்படி திருடர்கள் ஒரு காமிராவில் தப்பினாலும் வேறு காமிராக்கள் காட்டிக் கொடுத்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு கும்பல் கொள்ளையடிக்கும் நகைகளை மந்தித்தோப்பு ஊர் தலைவரான துரைப்பாண்டி என்பவரிடம் கொடுத்து அவரிடம் பணத்தை பெற்று அதனை நகைச் சீட்டாக போட்டு வந்தது தெரியவந்தது
திருட்டு பெண்களான கவுரி, சின்னத்தாயி, சாந்தி ஆகிய மூவரை கைது செய்து அவரர்களிடம் இருந்து 12 சவரன் நகைகளை பறிமுதல் செய்து அந்த கும்பல் வேறு எங்கெல்லாம் இது போன்று கைவரிசை காட்டி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்