ரீல்ஸ் வீடியோவுக்காக பாறையில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!!

10

உலகம் முழுவதுமே இன்ஸ்டா ரீல்ஸ் மனிதர்களை பித்து பிடிக்க வைத்து வருகிறது. இந்நிலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக பாறையில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் 3 நாட்களுக்குப் பின்னர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பெண் மருத்துவர் ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக உயரமான பாறை மீது இருந்து துங்கபத்திரா ஆற்றில் குதித்துள்ளார். அதன் பின்னர் கரை திரும்ப முடியாமல் தவித்த பெண் மருத்துவர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் 3வது நாட்கள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது உடன் சென்ற நண்பர்களைக் கலங்கடித்துள்ளது.

ஐதரபாத்தை சேர்ந்தவர் அனன்யா ராவ் (26). எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ள அனன்யா ராவ், மருத்துவ மேல்படிப்பை படித்துக் கொண்டே தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தனது நண்பர்களுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்ற அன்னயா ராவ், சுற்றுலா இடங்களை அவர்கள் சுற்றிப்பார்த்து விட்டு, அதன் தொடர்ச்சியாக கொப்பல் மாவட்டம் சனாபூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.

அங்கிருந்து கடந்த 18ம் தேதி அந்த பகுதியில் ஓடும் துங்கப்பத்ரா ஆற்றுக்கு அவர்கள் அனைவரும் சென்ற நிலையில், ஆற்று தண்ணீரைப் பார்த்ததும் உற்சாகமடைந்த அனன்யா ராவ், துங்கப்பத்ரா ஆற்றில் குளிக்க முடிவு செய்தார்.


அவருக்கு நீச்சல் தெரியாது என்ற போதிலும் உயரமான பாறைகளைப் பார்த்ததும், அந்த பாறையில் இருந்து ஆற்றுக்குள் குதிக்கிறேன். வீடியோ எடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அவருக்கு நீச்சல் தெரியாது என்பதை அறியாத நண்பர்கள், அனன்யா ராவ் பாறை முகட்டில் ஏறி நின்று கீழே குதிப்பதை வீடியோவாக பதிவு செய்துக் கொண்டிருந்தனர். தண்ணீரில் விழுந்த அவர் நீச்சலடித்து வெளியே வர முயன்றார்.

ஆனால் அவரால் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியவில்லை. தேர்ந்த நீச்சல் தெரிந்தவர்களே தடுமாறும் துங்கப்பத்ரா ஆற்றில் பெண் டாக்டர் அனன்யா ராவ் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு நண்பர்கள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அனன்யா ராவை தேட தொடங்கினர்.

ஆனால் பாறைகள் நிறைந்த பகுதி என்பதாலும் அந்த பகுதியில் துங்கபத்ரா அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு இருந்ததால் அனன்யா ராவை தேடும் பணி சிரமமானதைத் தொடர்ந்து அணையின் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

அதன் பின்னரும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வந்த நிலையில் 3வது நாளில் அனன்யா ராவின் உடலை மீட்டனர். அவர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்த நிலையில், அந்த இடத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனன்யா ராவின் இறுதி காட்சிகள் பதிவாகியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அனன்யா ராவ் பாறை மீது ஏறி நிற்கிறார்.

நண்பர்கள் ஒன்டூ த்ரி என்கின்றனர். அதன் பின்னர் சற்று பயந்த நிலையில் இருக்கும் அனன்யா, பின்னர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு கொஞ்சமும் பாறையிலிருந்து கீழே குதிக்கிறார். தண்ணீரில் குதித்த பின்னர் அனன்யா சிறிது தூரம் நீச்சலடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதன் பின்னர் அவரால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியாமல் மூழ்கி இறந்துள்ளார்.