லண்டனில் அதிர்ச்சி சம்பவம்… கத்தி முனையில் கடத்தப்பட்ட மூன்று சிறுவர்கள்: தந்தையின் கொடுஞ்செயல்..!

461

தெற்கு லண்டனில் தந்தை ஒருவர் தமது மூன்று மகன்களை அவர்களின் வளர்ப்பு இல்லத்தில் இருந்து கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். தெற்கு லண்டனில் உள்ள கோல்ஸ்டன் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

26 வயதேயான இம்ரான் சஃபி என்ற ஆப்கான் நாட்டவர், தமது மகன்களான பிலால்(6), எப்ரார்(5), மற்றும் யாசீன்(3) ஆகிய மூவரையும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி மாலை 6 மணியளவில் கோல்ஸ்டனில் உள்ள குடியிருப்பில் இருந்து கடத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குடியிருப்பில் உள்ள தோட்டத்தில் மூவரும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு சென்ற சஃபி, வளர்ப்பு தாயாரை கத்தியை காட்டி மிரட்டி, தமது மகன்களை கடத்தியுள்ளார். மட்டுமின்றி இச்சம்பவத்தில் அந்த வலர்ப்பு தாயாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.


இதனிடையே, தமது மகன்களுடன் சஃபி வெளிநாடு சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது மகன்கள் மூவரையும், பிரித்தானியாவில் உள்ள சஃபியின் நண்பர்கள் அல்லது குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கவும் வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சஃபிக்கு நெருக்கமான 8 பேரை கைது செய்த பொலிசார், விசாரணைக்கு பின்னர் பிணையில் அவர்களை விடுவித்துள்ளனர்.

தற்போது கடத்தப்பட்ட மூன்று சிறுவர்களையும் மீட்கும் பொருட்டு நூற்றுக்கணக்கான பொலிசார் களமிறங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

எவ்வித சிக்கலும் இன்றி மூன்று சிறார்களையும் மீட்பதே பொலிசாரின் தற்போதைய திட்டம் என கூறிய அதிகாரிகள், இந்த சம்பவம் அசாதாரணமானது அல்ல, ஆனால் குழந்தைகள் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போனது மிகவும் அசாதாரணமானது என்று தெரிவித்துள்ளனர்.