லண்டனில் தன் இளம் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், பழியை தன் மனைவி மீதே போட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (24) என்பவருக்கும் மேஹாக்குக்கும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி திருமணம் ஆகியுள்ளது.
திருமணமாகி ஐந்தே மாதங்களில் மாணவர் விசாவில் லண்டன் வந்துள்ளார் மேஹாக். பின்னர் பணி விசா பெற்ற அவர், தனது கணவரான சாஹிலுக்கு கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29ஆம் திகதி, பொலிசாரை அழைத்த சாஹில், தான் தன் மனைவியை கத்தியால் குத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
உடனடியாக பொலிசார் அங்கு விரைய, மேஹாக் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ உதவிக் குழுவினர் ஈடுபட்டும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மேஹாக் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சாஹில், மேஹாக்கை, தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்திவந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சாஹில் இந்தியாவிலிருக்கும்போதே, லன்டனிலிருக்கும் தன் மனைவியை மொபைலில் அழைக்கும்போது, ஒவ்வொரு முறை தான் அழைக்கும்போதும் உடனடியாக அவர் பதிலளிக்கவேண்டுமென வற்புறுத்துவாராம்.
பதிலளிக்காவிட்டால் கணவர் கோபித்துக்கொள்ள, அடிக்கடி மொபைலில் கணவரின் அழைப்புகளுக்கு பதிலளிப்பதால் வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரிகள் எச்சரிக்க, இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துவந்துள்ளார் மேஹாக்.
தன் மனைவி யாருடனோ பேசுவதாக சந்தேகப்படும் சாஹில், மேஹாக் தான் தன்னுடைய தாயுடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறினால், அதை நிரூபிக்க ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்ப வற்புறுத்துவாராம்.
பின்னர் தனது கணவரான சாஹிலுக்கு மேஹாக் கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார். ஆனால், சாஹில் லண்டன் வந்தபின் மனைவியை அடிக்கத் துவங்கியிருக்கிறார்.
ஒருநாள் சாஹில் மேஹாக்கை மொபைலில் அழைக்க, அவர் பதிலளிக்காமல் இருக்கவே, நீ எனக்கு துரோகம் செய்கிறாய், கடவுள் உன்னைத் தண்டிக்கப்போகிறார் என்றும், நீ இப்போது எந்த ஆணுடன் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும் என்றும், நீ வீட்டுக்கு வா, உன்னை என்ன செய்யப்போகிறேன் என்று பார் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் சாஹில்.
அவர் சொன்னதுபோலவே, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மேஹாக்கை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார் சாஹில். மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவசர உதவியை அழைத்த சாஹில், அவள் எனக்கு துரோகம் செய்துவிட்டாள், ஆகவே, அவள்தான் அவளுடைய சாவுக்குக் காரணம் என்றும் கூறியுள்ளார். சாஹிலுக்கு, குறைந்தபட்சம் 14 ஆண்டுகளும், 187 நாட்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.