வியன்னாவிலிருந்து லண்டன் திரும்பும் விமானம் ஒன்றின் கழிவறையில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விமானத்தில் பைலட் பிரித்தானிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல கொடுத்தார்.
இரண்டு போர் விமானங்கள் உதவிக்கு விரைந்ததைத் தொடர்ந்து Stansted விமான நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகள் விமானத்தை பத்திரமாக விமான நிலையத்திற்கு அழைத்து வந்த அந்த போர் விமானங்கள், இரு முறை விமான நிலையத்தை வட்டமிட்டன.
நேற்று மாலை உள்ளூர் நேரப்படி மணி 7.20க்கு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தப்படாமல் ஒரு ஓரமாக கொண்டு நிறுத்தப்பட்டது.
விமானம் தரையைத் தொட்டதும் ஆயுதம் தாங்கிய பொலிசார் விமானத்தை சூழ்ந்துகொண்டனர்.
சிறிது நேரத்தில் விமானத்திற்குள் நுழைந்த பொலிசார் குவைத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தீவிரவாத தொடர்பில் அந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக கருதப்படும் நிலையில், மேலதிக தகவல்கள் இல்லை. பின்னர், அந்த போர் விமானங்கள் மீண்டும் தங்கள் தளத்துக்கே திரும்பின.