வரதட்சணைக் கொடுமை.. 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!!

175

சென்னை அடுத்த மதுரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது பாலசுப்பிரமணியன். இவர் சித்தலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை சில நாட்கள் சிறப்பாக இருந்த நிலையில், கணவரின் சான்றிதழ்களை மகேஸ்வரி ஒரு நாள் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

அதில் அவரது வயது, அவர் கூறியது போல் 29 அல்ல 35 என்பது தெரிய வந்தது. இருவருக்கும் இடையே 10 ஆண்டுகள் வித்தியாசம் இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதாக மகேஸ்வரி உணர்ந்துள்ளார்.

இது குறித்து கணவரிடம் கேட்டபோது அவர் உரிய பதிலளிக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது அதிக நகைகள் அணியாததை குறிப்பிட்டு பாலசுப்பிரமணியனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மகேஸ்வரியை குறை கூறி வந்துள்ளனர்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருமுறை கர்ப்பம் தரித்த போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே கர்ப்பத்தை பாலசுப்ரமணியனும் அவரது குடும்பத்தினரும் கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

வேறு சில பெண்களுடன் பாலசுப்ரமணியன் பேசி வந்ததும், இருவருக்குமிடையே விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடைபெற்று வந்ததால் தனியாக வீடு கட்டி சென்று விடலாம் என மகேஸ்வரி, பாலசுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளார்.


ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாலசுப்பிரமணியன், மகேஸ்வரியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று வந்தால், தனியாக வீடு கட்டலாம் என கூறி அடித்து உதைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும், 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்ததால், மகேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வந்த பாலசுப்பிரமணியன், “இனி உன்னோடு வாழ முடியாது. எனக்கு விடுதலை பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடு” எனக்கூறி சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி கணவர் வந்து சென்ற சிறிது நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 8 மாதங்களேயான நிலையில், அவர் உயிரிழந்ததை அடுத்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசாரும் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.