ஜேர்மனி…….
ஜேர்மனியின் மியூனிக் விமான நிலையத்தில் பயண பெட்டிக்குள் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சுங்க அதிகாரிகளால் பெண்கள் இருவர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களில் ஒருவரது கணவர் 2008-ல் இறந்ததாகவும், அவரது நினைவாக இந்த எலும்புத்துண்டுகளை எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது.
ஆர்மீனியா நாட்டவர்களான இவர்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கான முயற்சியில் அவரது எலும்புகளை ஒரு பெட்டியில் சேகரித்து சூட்கேஸில் பத்திரப்படுத்தியுள்ளனர்.
கிரேக்கத்தில் இருந்து ஆர்மீனியா செல்லும் வழியில் மியூனிக் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட இரு பெண்களில் ஒருவருக்கு 74 வயதும் அவரது மகளுக்கு 52 வயதும் என தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மருத்துவர் மற்றும் அரசாங்க சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்துள்ளனர்.
அவர்கள் முன்னெடுத்த விசாரணைக்கு பின்னர் தொடர்புடைய இரு பெண்களும் எந்த குற்றமும் செய்யப்படவில்லை என்று அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
மட்டுமின்றி, அவர்களது உறவினரின் மரணம் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை இரு பெண்களும் சமர்ப்பித்த நிலையில் அவர்கள் ஆர்மீனியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் இறந்த நபரின் மிச்சங்களுடன் சொந்த நாட்டிற்குத் திரும்ப அந்தப் பெண்கள் ஏன் 12 ஆண்டுகள் காத்திருந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.