கேரள மாநிலம் திருச்சூரில், கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி எல்வினா, எதிர்பாராத வகையில் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் செல்லக்கரை வட்டுலியைச் சேர்ந்த தம்பதியர் ரெஜி – பிரிஸ்லா. இவர்களது ஒரே மகள் எல்வினா ரெஜி(10). நேற்றிரவு று 9 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எல்வினா, திடீரென கழுத்தில் ஷால் சிக்கி இறுக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி ஷால் வைத்து ஜன்னலில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த போது அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.
சிறுமியின் தாய் பிரிஸ்லா, விளையாடிக் கொண்டிருந்த எல்வினாவை இரவு உணவு சாப்பிட அழைக்கச் சென்றபோது, அவள் கழுத்தில் ஷால் மாட்டப்பட்டிருந்த நிலையில் படுத்திருந்தாள்.
ஷாலின் ஒரு பகுதி ஜன்னலிலும் மற்றொரு பகுதி எல்வினாவின் கழுத்திலும் கட்டப்பட்டிருந்தது. உடனடியாக பெற்றோர்கள் பதறியடித்தப்படி எல்வினாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சேலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, எல்வினாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் குழுவினரும் விரைந்து சென்று தடயங்களை சேகரித்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவி எல்வினா ஷால் வைத்து ஜன்னல் கம்பிகளில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக ஷால் கழுத்தை இறுக்கியதில், மூச்சுத்திணறி இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.