வீட்டில் திடீரென சுருண்டு விழுந்து 14 வயது மாணவி மாரடைப்பால் மரணம்!!

18

தனது வீட்டில், டிவியில் இந்திய அணி, சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்ததை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த 14 வயது மாணவி,

திடீரென மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் சிறுமிக்கு வேறு எந்த உடல்நலக் கோளாறுகளும் இதுவரை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா 3வது முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த போட்டியை உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரயன்ஷி என்ற 14 வயது சிறுமி டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

விராட் கோஹ்லி இந்த மேட்சில் விளையாடிய போது அவுட் ஆனதை பார்த்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் வேகமாக செய்தி பரவியது.


இந்நிலையில் இது குறித்து அவரின் தந்தை அஜய் “எனது பெண் உயிரிழந்த நேரத்தில் கோஹ்லி பேட்டிங் செய்ய களத்தில் கூட இறங்கவில்லை. என் மகள் இறந்தது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்டது தான்” என விளக்கம் அளித்துள்ளார்.

எந்தவிதமான நோய் தாக்குதலுக்கும் உள்ளாகாத தங்களது மகள், வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம், பெற்றோர்களை நிலைகுலைய செய்துள்ளது.

சமீப காலங்களாக, குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு இளைஞர்கள் பெருமளவில் மாரடைப்பால் மரணமடையும் போக்கு அதிகரித்து வருவது கவலைக்குள்ளாகுகிறது.