வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்.. கலங்கும் உறவினர்கள்!!

238

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தை பொலிசார் படுகொலை சம்பவமாக கருதி விசாரணையை முன்னெடுக்க உள்ளனர். மேலும், கொலைக்கான காரணத்தை அடையாளப்படுத்தவும் அதிகாரிகள் தரப்பு முயற்சி முன்னெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் அந்த குடும்பம் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற உள்ளது என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். நியூ ஜெர்சி மாகாணத்தின் Plainsboro பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.


உள்ளூர் நேரப்படி சுமார் 4.30 மணியளவில் பொலிசார் குடியிருப்பு ஒன்றில் இருந்து இரு சிறார்கள் உட்பட நால்வரின் சடலங்களை மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 43 வயதான தேஜ் பிரதாப் சிங், அவரது மனைவி 42 வயதான சோனல் பரிஹார், இவர்களின் 10 வயது மகன் மற்றும் 6 மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உறவினர்களே அந்த குடும்பத்தினர் தொடர்பில் நலம் விசாரிக்கும் பொருட்டு பொலிசாரை நாடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதும் அவர்களின் உறவினர்கள் பலர் அப்பகுதியில் திரண்டதாகவும், பலரும் கண் கலங்கியபடி காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும், மகிழ்ச்சியான குடும்பம் அது எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்டு 2018ல் சுமார் 635,000 டொலர் செலவிட்டு, அவர்கள் சடலமாக மீட்கப்பட்ட குடியிருப்பை வாங்கியதாக கூறப்படுகிறது.