வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால் பெட்ரோல் ஊற்றி மகனை எரித்துக் கொலை செய்த தாய்!!

11

வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால் பெட்ரோல் ஊற்றி தாயே மகனை எரித்துக்கொன்ற சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகள் கொடுத்த புகாரின்பேரில் இறந்த வாலிபரின் தாய் கைதானார்.

கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (23). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

கிருஷ்ணமூர்த்தியின் தாயாரான ஜெயந்தி (45) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு வேலை கிடைக்காததால் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளார்.

இதனிடையே தொழில் தொடங்க பணம் வேண்டுமென்று கூறி அடிக்கடி குடிபோதையில் தாயிடம் கிருஷ்ணமூர்த்தி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி தனது தாய் ஜெயந்தியிடம் தொழில் தொடங்க பணம் கேட்டு மீண்டும் பிரச்னை செய்துள்ளார்.

அதற்கு பணம் தர முடியாது என மறுத்துவிட்டதால், ஆத்திரத்தில் தாயை கிருஷ்ணமூர்த்தி மிரட்டியுள்ளார்.


அப்போது, ‘‘வேலைக்குப் போகாமல் ஊர்சுற்றி வந்ததோடு, வீட்டிலேயே இருந்துகொண்டு என்னையே மிரட்டுகிறாயா’’ என கேட்டவாறு, வீட்டின் சமையல் அறையில் வைத்திருந்த பெட்ரோல் எடுத்து வந்து மகன் கிருஷ்ணமூர்த்தி மீது ஊற்றி, ‘‘இத்தோடு செத்துப் போடா’’ என்று கூறி தீயை வைத்து மகனை கொளுத்தியுள்ளார்.

இதனால் கிருஷ்ணமூர்த்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களது உதவியுடன் கிருஷ்ணமூர்த்தியை மீட்ட மனைவி பாரதி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது கணவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் நள்ளிரவு கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாரதி மப்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் ஜெயந்தியை கைது செய்தனர். பின்னர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

வேலைக்குச் செல்லாமல், குடிபோதையில் ஊர் சுற்றி வந்த மகனை தாயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.